இந்தியா

சபரிமலை கோவில் வழிபாடு கட்டணத்திற்கு போலி ரசீது வழங்கி பக்தரிடம் பணம் மோசடி- போலீசார் விசாரணை

Published On 2023-03-31 10:20 IST   |   Update On 2023-03-31 10:20:00 IST
  • ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும்.
  • சென்னை பக்தர் கொடுத்த புகார் தொடர்பாக பம்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்வார்கள்.

ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக சாமிக்கு தங்க அங்கி சார்த்தி வழிப்பட கோவிலில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோல களபாபிஷேகம், நெய்யபிஷேகம் போன்றவற்றிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சீசன் காலங்களில் கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் ஏராளமானோர் காத்திருப்பார்கள். இதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக களபாபிஷேகம், சாமிக்கு தங்க அங்கி சார்த்தி வழிபடுவதற்கான கட்டணம் போன்றவற்றிற்கு போலி ரசீது வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

இதில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவரிடம் ரூ.1.6 லட்சத்திற்கு போலி ரசீது கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. அந்த பக்தர் இதுதொடர்பாக பம்பை போலீசில் புகார் கொடுத்தார்.

சென்னை பக்தர் கொடுத்த புகார் தொடர்பாக பம்பை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பம்பையில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த சீசன் காலத்தில் தங்கி இருந்த 2 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 463, 468,469 மற்றும் 471 ஆகிய 5 பரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News