இந்தியா
null

சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை - சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி

Published On 2025-05-06 19:06 IST   |   Update On 2025-05-06 19:07:00 IST
  • கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை OMC நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கியது.
  • குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஓபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை OMC நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலால் மாநில கருவூலத்திற்கு ரூ.884 கோடி இழப்பு ஏற்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சிபிஐ, 2011 அன்று முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்குநரான ஜனார்த்தன் ரெட்டி, அவரது மைத்துனரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அப்போதைய சுரங்கங்கள் மற்றும் புவியியல் உதவி இயக்குநரான VD ராஜகோபால் மற்றும் ஜனார்த்தன் ரெட்டியின் தனி உதவியாளர் மஹ்ஃபுஸ் அலி கான் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து இன்று தண்டனையை அறிவித்துள்ளது.

அதன்படி நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்தது. ஜனார்தன் ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான உடனேயே, சிபிஐ ஜனார்தன் ரெட்டி மற்றும் பிறரைக் காவலில் எடுத்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதான முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் முன்னாள் அதிகாரி பி. கிருபானந்தம்  ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News