இந்தியா

முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2026-01-08 07:49 IST   |   Update On 2026-01-08 07:49:00 IST
  • மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும்.

புதுடெல்லி:

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது.

அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

இதற்கான முறையான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், '2027-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், வீடு வீடாக சென்று வீடு பட்டியலிடும் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பு, சுய கணக்கெடுப்பு பணிகள் 15 நாட்கள் நடத்தப்படும் என்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் அடங்கிய முதல்கட்ட கணக்கெடுப்பு முடிவடைந்தவுடன் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.

அதன்படி லடாக் யூனியன் பிரதேசம், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களை தவிர, மீதி பகுதிகளில், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். லடாக் யூனியன் பிரதேசம், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில், வருகிற செப்டம்பர் மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும். செல்போன் செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News