இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து - 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Published On 2023-06-05 17:45 GMT   |   Update On 2023-06-05 17:45 GMT
  • இந்த விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ்வர்:

ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக கட்டாக் காவல் நிலையம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரெயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News