காதலனை கட்டி வைத்து அடித்துக்கொன்ற குடும்பத்தினர்.. விரக்தியில் காதலி எடுத்த முடிவு
- மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
- இது ரவிக்குத் தெரியவரவே, இரவில் மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹமீர்பூரைச் சேர்ந்தவர் 35 வயதான ரவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான மனீஷா என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களது காதலுக்கு மனீஷாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
இது ரவிக்குத் தெரியவரவே, நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது, மனீஷாவின் குடும்பத்தினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து, மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவி இறந்ததைக் கண்ட மனீஷாவின் குடும்பத்தினர் அச்சத்தில் மூழ்கினர். கொலை வழக்கு தன் மீது வந்துவிடுமோ என்ற பயத்தில், மனீஷாவின் மாமா பிண்டூ என்பவர் அங்கியேய தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மனீஷாவின் குடும்பத்தினர் உடனடியாக ரவி மற்றும் பிண்டூ ஆகிய இருவரையும் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பிண்டூவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, காதலன் ரவி இறந்த துக்கத்தில் மனீஷாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் மீட்டு அதே சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். தற்போது பிண்டூ மற்றும் மனீஷா ஆகிய இருவரது நிலையும் கவலைக்கிடமாக தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.