மனைவியுடன் தந்தைக்கு தொடர்பு, கொலை செய்ய சதி: மரணமடைந்த முன்னாள் டிஜிபி மகன் வீடியோவில் பகீர் குற்றச்சாட்டு
- முன்னாள் டிஜிபி-யின் மகன் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.
- அவரது மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், வீடியோ ஒன்றில் தந்தை, தாய் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 33 வயதான அகில் அக்தர் என்பவரின் மரணம் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதற்கிடையே, அகில் ரெக்கார்டு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் என தந்தைக்கும், மனைவிக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், தாய் மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் அவரது தந்தையான முன்னாள் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா, தாயாரான முன்னாள் பஞ்சாப் மாநில அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ரஜியா சுல்தானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அகில் அக்தர் கடந்த வியாழக்கிழமை இரவு அவருடைய பஞ்ச்குலா வீட்டில் மயக்கமான நிலையில் கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அகில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், சில மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அதனால இறந்திருக்கலாம் என தொடக்க விசாரணையில் கண்டுபிடித்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அகில் பதிவு செய்து, குடும்ப நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது, விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் அகில் தனது தந்தை மற்றும் மனைவிக்கு இடையில் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அகில் அந்த வீடியோவில் "என்னுடைய தந்தையோடு, என் மனைவியின் தகாத உறவை நான் கண்டுபிடித்தேன். இதனால் நான் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்ன செய்வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று நான் தினமும் உணர்கிறேன்.
என்னை பொய்யாக சிறையில் அடைப்பது அல்லது கொலை செய்வதுதான் எனது தாய் மற்றும் சகோதரியின் திட்டம். எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, எனது மனைவியை எனது தந்தைக்கு தெரியும். முதல்நாள், என் மனைவி, அவளை தொட அனுமதிக்கவில்லை. அவள் என்னை திருமணம் செய்யவில்லை. எனது தந்தையை திருமணம் செய்தாள்.
நான் ஒரு சரியான வாதத்தை முன்வைக்கும் போதெல்லாம், அவர்களின் கதை மாறுகிறது. தனது குடும்பத்தினர் தன்னை பைத்தியம் என்று கூறி தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
நான் அவர்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை அல்லது கொலை வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று என்னை மிரட்டுகிறார்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் அகில் கூறுகிறார்.
அதேவேளையில், மற்றொரு வீடியோவில் என் குடும்பத்தினர் மீது சுமற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளும், என்னுடைய மனநிலை பிரச்சினையால் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
அகிலின் மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை. அவரது மரணத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு இருப்பதாக ஒரு புகார் வந்தது. மேலும் அகில் அக்தரின் சமூக ஊடகப் பதிவுகள், சில வீடியோக்கள், சில புகைப்படங்கள், சில சந்தேகங்களை எழுப்பின. அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்று துணை காவல் ஆணையர் சிருஷ்டி குப்தா தெரிவித்தார்.
மிக உயர் பதவி வகித்த தந்தை மற்றும் தாய் மீது மகன் வீடியோவில் குற்றம்சாட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.