மனைவியின் கள்ளத்தொடர்பை நிரூபிக்க குழந்தைக்கு DNA சோதனை நடத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார்.
- ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது.
மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில், மைனர் குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், 2013 இல் பிரிந்தபோது, மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.
கணவர் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரினார். ஆனால், விவாகரத்து மனுவில் அவர் குழந்தையின் தந்தை இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. இந்த நிலையில், குழந்தைக்கு DNA சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மைனர் குழந்தைக்கு DNA சோதனைக்கு உத்தரவிட்ட குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி ஆர்.எம். ஜோஷி உத்தரவிட்டார்.
இத்தகைய மரபணு பரிசோதனைகள் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கள்ளத்தொடர்பு காரணமாக விவாகரத்து கோர ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதாலேயே, DNA சோதனைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த அவர், மனைவி மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு இருந்தால், அதை DNA சோதனை மூலம் அல்லாமல், வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கலாம் என்று தெரிவித்தார்.
குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார். ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார்.