இந்தியா

அகமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட கடைசி உடல்- 260 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வ தகவல்

Published On 2025-06-28 17:35 IST   |   Update On 2025-06-28 17:35:00 IST
  • விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
  • மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில், கல்லூரி விடுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 29 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 270 உயிரிழந்ததாக கூறப்பட்டது.

உயிரிழந்தவர்கள் தீயில் உரிந்து கரிக்கட்டையாகியதால் உடலை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டு அதன்மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது.

கடந்த 23ஆம் தேதி வரை 259 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு, உறவினர்களிடம் வழங்கப்பட்டு வந்தது. ஒருவருடைய உடல் மட்டும் உறவினர்களின் டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒத்துப்போகாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று அந்த உடலும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டதாக அகமதாபாத் பொது மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 270 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மொத்த உயிரிழப்பு 260 ஆகும் என அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 260 பேர்களில் 181 இந்திய பயணிகள் ஆவார்கள். 19 பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் அடங்குவார்கள். 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள். 52 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்.

Tags:    

Similar News