ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை
- குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர்.
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், தனது ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், "குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது. நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் வெளியிட இருந்தார்.
உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.