இந்தியா

திருப்பதியில் பஸ்கள் ஓடாததால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பக்தர்கள் அவதி

Published On 2023-09-09 05:41 GMT   |   Update On 2023-09-09 05:41 GMT
  • சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
  • பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

இதனால் ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.

கீழ் திருப்பதியில் ஓட்டல்கள், கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த முதியவர்கள் குழந்தைகள் உள்படபக்தர்கள் உணவு, டீ, காபி, குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர்.

பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் தவித்தனர். ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.

இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருப்பதி ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News