இந்தியா

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்டது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Published On 2022-11-18 02:18 GMT   |   Update On 2022-11-18 02:18 GMT
  • 2016 நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
  • புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

புதுடெல்லி :

கருப்பு பணம், கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.

இதன் மூலம் அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 57 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் மீதான அடுத்த கட்ட விசாரணை வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

இந்தநிலையில், மேற்படி வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:-

கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகிவற்றுக்கு எதிராக நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே கலந்தாலோசிக்கப்பட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டுகள் குறைந்ததுடன், டிஜிட்டல் பண பரிவர்த்தனையும் அதிகரித்து, கணக்கில் வராத வருவாயை கண்டறிய உதவியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News