இந்தியா

முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம்: தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்

Published On 2025-05-30 14:50 IST   |   Update On 2025-05-30 14:50:00 IST
  • வருகிற மாதங்களில் பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் வர உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி 4. 32 லட்சம் கோடி தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது.

புதுடெல்லி:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேவைப்படுபவர்கள் மட்டுமே தங்க நகைகளை வாங்குகிறார்கள். முதலீடாக வாங்க விரும்புபவர்கள் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை அதிக அளவில் வாங்குகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 33 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது இதற்கு காரணமாக உள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் தங்க நகைகளின் தேவை 7 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்டுகளுக்கான தேவை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

வருகிற 2025-26-ம் ஆண்டிலும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. இதனால் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்டுகளுக்கான தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு காரணமாக விற்பனை குறைந்து வந்தாலும் நகைக்கடைகளுக்கு 14 முதல் 16 சதவீதம் வரை வருவாய் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வருகிற மாதங்களில் பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் வர உள்ளது. இதனால தங்க நகைகளுக்கான தேவை அதிகரிக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி 4. 32 லட்சம் கோடி தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது.

2024 மார்ச் மாத நிலவரப்படி, ரிசர்வ் வங்கியிடம் ரூ.2,74,714.27 கோடி மதிப்புள்ள 822.10 டன் தங்கம் இருந்தது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, ரூ.4.32 லட்சம் கோடி மதிப்புள்ள 879.58 மெட்ரிக் டன்னாக தங்கம் இருப்பு உயர்ந்துள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்க இருப்பு 57.48 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது.

மேலும் வங்கி மோசடிகள் 3 மடங்காக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்துதலில் மோசடிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News