இந்தியா

வசதிகள் இல்லை; ஆனால் வந்தே பாரத் ரெயிலாம்... மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் தந்தை ஆவேசம்

Published On 2023-06-27 10:19 GMT   |   Update On 2023-06-27 10:19 GMT
  • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்‌ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

புதுடெல்லி:

கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி அகுஜா (வயது 34). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் சண்டிகர் செல்வதற்காக புதுடெல்லி ரெயில் நிலையம் வந்தார்.

டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்ததன் காரணமாக பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. ரெயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெயில் நிலையம் வந்த சாக்ஷி அகுஜா மழை நீரில் மிதிக்காமல் இருக்க அதன் அருகே உள்ள மின்கம்பத்தை பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் பலியான சாக்ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் ஜோப்ரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ரெயில் நிலையங்களில் போதிய வசதி இல்லை. ஆனால் வந்தே பாரத் ரெயில்கள் விடுவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் எனது மகளுக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. எந்த ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவர்களோ, போலீசாரோ அங்கு இல்லை. 40 நிமிடங்கள் கழித்தே ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எனது மகள் இறந்து விட்டாள். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நமது அமைப்புகள் எதுவும் மேம்படவில்லை. ஆனால் வந்தே பாரத் போன்ற உயர்தர ரெயில்களை உருவாக்கி வருகிறோம். அதே நேரம் ரெயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இதற்காக சட்டப் போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News