இந்தியா

மதுபான கொள்கை உருவாக்கத்தில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு: ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

Published On 2024-04-09 16:18 IST   |   Update On 2024-04-10 09:10:00 IST
  • அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல.
  • முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது.

மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. ஒரு வாரம் அமலாக்கத்துறை காவலில் இருந்த பிறகு தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கதுறை காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். மேலும், ஜாமின் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதன்பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-

டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார். கெஜ்ரிவால் பங்கு இருப்பது அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. அப்ரூவரின் வாக்கு மூலத்தை சந்தேகிப்பது நீதிபதி, நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதாகிவிடும்.

யார் யாருக்கு தேர்தல் பத்திரத்தை வழங்கியுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிப்பது என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது.

முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது. மக்களவை தேர்தல் குறித்து கெஜ்ரிவாலுக்கு தெரியும். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக கொள்ள முடியாது. நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல.

அரசியல் காரணங்களை பரிசீலிக்க முடியாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல.

அரசியலமைப்பு சாசன அறம் குறித்தே நீதிமன்றத்தின் கவலை, அரசியல் அறம் குறித்து அல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல என்பதால் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News