டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்... வரும் நாட்களில் 'மிகவும் மோசம்' அடையும் என எச்சரிக்கை
- வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.
- நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியின் காற்றின் தரம் இன்று மீண்டும் கடுமையாக மோசமடைந்தது. நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 264 ஆக உயர்ந்து, மோசமான பிரிவில் உறுதியாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில், குறிப்பாக ஐடிஓவைச் சுற்றி அடர்த்தியான புகை மூட்டம் நீடித்தது. அங்கு காற்றின் தரக் குறியீடு 290-ஐ தொட்டது. வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.
டெல்லி கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு சுத்தமான காற்றை பதிவு செய்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு 202 ஆகக் குறைந்துள்ளது. இது இந்த வார தொடக்கத்தில் "மிகவும் மோசமான" அளவீடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
ஆனால் இன்று காலை நகரத்தின் 38 கண்காணிப்பு நிலையங்களில் பெரும்பாலானவை கவலையளிக்கும் நிலைக்குத் திரும்பி உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலியின் தரவு, 300 க்கு மேல் "மிகவும் மோசமான" வரம்பில் 28 நிலையங்கள் உள்ளன.
டெல்லியை ஒட்டிய நகரங்களிலும் காற்றின் தரம் அவ்வளவாக சிறப்பாக இல்லை. குருகிராமில் காற்றின் தரக் குறியீடு 229 ஆகவும், நொய்டாவில் 216 ஆகவும், காசியாபாத்தில் 274 ஆகவும் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் 'மோசமான' மண்டலத்தில் உள்ளன. பரிதாபாத்தில் 187 புள்ளிகளில் சற்று சிறப்பாக செயல்பட்டாலும், இன்னும் ஆரோக்கியமற்ற நிலையே நிலவுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ.க்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாசுக்கள் குவிந்துவிடும் என்று முன்கூட்டியே காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று "மிகவும் மோசமாக" இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகளை ஆழமாக சுத்தம் செய்தல், தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை சோதனை செய்தல் உள்ளிட்ட மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தலைநகரில் மீண்டும் புகைமூட்டம் மோசமாக இருப்பதால், நகரம் முழுவதும் ஹாட்ஸ்பாட்களை இயல்பாக்க (normalise hotspots) குழுக்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.