இந்தியா

டெல்லியில் ஒருதலைக்காதலால் பயங்கரம்: கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு

Published On 2025-10-27 05:11 IST   |   Update On 2025-10-27 05:11:00 IST
  • கல்லூரி மாணவி ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தார்.
  • இதனால் அந்த மாணவி மீது திராவகம் வீசப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் அவர் நேற்று காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.

அப்போது அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்து அவர் விலகி செல்ல முயன்றார்.

அப்போது நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் முகத்தை நோக்கி வீசினார்.

அப்போது தனது முகத்தை அந்த இளம்பெண் தனது கைகளால் மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் திராவகத்தை வீசியது தெரிந்தது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது காதலில் விழ வைக்க வேண்டும் என்னும் முயற்சி தோல்வியில் முடிய இந்த பயங்கரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தலைமறைவான ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News