இந்தியா

லட்டு உற்பத்தி இடத்தில் இருந்து கவுண்டர்களுக்கு கொண்டு வருவதில் தாமதம்- பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்

Published On 2022-11-29 04:49 GMT   |   Update On 2022-11-29 04:49 GMT
  • தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர்.
  • தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவசமாக லட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50-க்கு சிறிய வகை லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

லட்டு தயார் செய்யப்படும் இடத்திலிருந்து விற்பனை செய்யப்படும் கவுன்டர்களுக்கு லட்டு எடுத்து செல்லும் பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் வழங்கி இருந்தது.

அதன்படி தினமும் ஒரு ஷிப்டுக்கு 30 ஊழியர்கள் வீதம் 3 ஷிப்ட் முறையில் 90 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு தனியார் நிறுவனம் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் லட்டு தயார் செய்யும் இடத்தில் இருந்து கவுன்டர்களுக்கு லட்டுக்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

லட்டுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்டர்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு தேவையான அளவு லட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.

இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு லட்டு கொண்டு செல்லும் முறை சரிவர தெரியாததால் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 67,486 பேர் தரிசனம் செய்தனர். 36,082 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News