ரூ.256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
- கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
- துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்கள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்தது அம்பலமானது.
இந்த கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ. 256 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது சலீம் ஷேக் தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலாவின் வலது கரமாக செயல்பட்டவர்.
சலீம் டோலா துபாயில் இருந்து கொண்டு சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் தயாரித்து வினியோகம் செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இது வரை ஒரு பெண் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.