மாமியாரை உயிரோடு எரித்து கொலை செய்த மருமகள்- தினமும் துன்புறுத்தியதால் ஆத்திரம்
- தீ விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- லலிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி, அப்பன்னபாலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (வயது 66). இவர் தனது மகன் சுப்பிரமணிய சர்மா, மருமகள் லலிதா, பேர குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஜெயந்தி கனக மகாலட்சுமி தனது மருமகள் லலிதாவை தேவையில்லாமல் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை அடிக்கடி துன்புறுத்தி வந்ததால் மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
மாமியாரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என லலிதா முடிவு செய்தார். அதன்படி பாட்டிலில் பெட்ரோலை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து இருந்தார்.
நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனர். வீட்டில் லலிதா மற்றும் அவரது மாமியார் மட்டும் இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட லலிதா அவரது மாமியாரை கயிற்றால் கட்டினார். இதுகுறித்து மாமியார் கேட்டபோது விளையாட்டுக்காக கட்டுவதாக தெரிவித்தார். பின்னர் கண்ணை கட்டினார். விபரீதம் நடக்கப் போவதை அறிந்த ஜெயந்தி கனக மகாலட்சுமி தன்னை ஒன்றும் செய்து விடாதே என மருமகளிடம் கெஞ்சினார்.
இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த லலிதா வீட்டில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து மாமியார் மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பற்றியதால் ஜெயந்தி கனக மகாலட்சுமி வலியால் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் கணவருக்கு போன் செய்த லலிதா மாமியார் உடலில் எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரிந்து இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் லலிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மாமியார் தேவையில்லாமல் தன்னை துன்புறுத்தியதால் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தார்.
போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து லலிதாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.