போதை தரும் பேச்சு... மயக்கும் அழைப்பு..! டேட்டிங் செயலிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல்- சைபர் கிரைம் எச்சரிக்கை
- சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும்.
- டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.
திருப்பதி:
சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டும் செயலிகளுக்குப் பிறகு டேட்டிங் செயலிகள் மிகவும் பிரபலமான மோசடிகளாக மாறி வருகிறது.
நீங்கள் தனியாக இருக்கிறீர்களா சலிப்பாக இருக்கிறதா நானும் தனியாக இருக்கிறேன். நாம் கொஞ்ச நேரம் பேசலாமா, ப்ளீஸ், என குண்டூரைச் சேர்ந்த வாலிபருக்கு ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் தகவல் அனுப்பினார்.
யோசிக்காமல் வாலிபர் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து அவளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கினார். இரவும் பகலும் எந்த வித்தியாசமும் இல்லை அவளுடன் அரட்டை அடிப்பதே வேலையாக நீடித்தது.
அவ்வப்போது வீடியோ அழைப்புகள் சின்னச் சின்னப் பேச்சுகளில் இருந்து தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வரை பரிச்சயமானார்கள்.
ஒருநாள் என் அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா என்று இளம்பெண் கேட்டார்.
வாலிபர் சொத்து ஆவணங்களை அடமானம் வைத்தும் சில நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் இளம்பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் 10 லட்ச ரூபாயை தவணைகளாக அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு இளம்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-
டேட்டிங் செயலிகளில் மணிக்கணக்கான அரட்டை, போதை தரும் பேச்சு மயக்கும் அழைப்பு, அவை உலகத்தையே மறக்கச் செய்கின்றன. கடைசியில் அதில் மூழ்கடித்து பணத்தை பறித்து விடுகின்றனர்.
சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும். சிலர் இளம்பெண்களை செயலிகளில் பதிவு செய்ய வைத்து வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.
அவர்கள் முதலில் அரட்டையடிக்கத் தொடங்குவார்கள். படிப்படியாக அறிமுகம் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்னேறுகிறது. சிலர் நிர்வாண அழைப்புகள் செய்து நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதைப் பதிவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர். டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.