கடலூர் ரெயில் விபத்து- மக்களவையில் ரெயில்வே மந்திரி விளக்கம்
- கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன.
- தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், ‘இன்டர்லாக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
கடலூரில் கடந்த 8-ந் தேதி லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியது. இந்த விபத்து குறித்து பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன.
கடலூர் லெவல் கிராசிங் விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானோர் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் மொத்தம் ரூ.11 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், 'இன்டர்லாக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 72 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக்கிங் பணி நடந்து வருகிறது. இந்த வசதி இருந்தால், லெவல் கிராசிங் கதவு மூடப்பட்டு இருந்தால் மட்டுமே ரெயில் செல்ல அனுமதி கிடைக்கும்.
தமிழ்நாட்டில், லெவல் கிராசிங்குகளை ஒழிக்கும் நோக்கத்தில், 235 ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 92 லெவல் கிராசிங்குகளில், 11 லெவல் கிராசிங்குகளில் ரெயில்வே மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசு சம்மதம் தெரிவிக்காததால், 7 மேம்பால பணிகளை தொடங்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.