இந்தியா

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரள அரசு: இந்திய கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு

Published On 2025-10-26 03:43 IST   |   Update On 2025-10-26 03:43:00 IST
  • மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
  • இந்நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.

திருவனந்தபுரம்:

மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க.வுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறைமுக கூட்டணி வைத்துள்ளது, பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குற்றம்சாட்டியது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி கல்வி வளர்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்தி உண்மையானால், அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இது தொடர்பாக, இடது முன்னணியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபியின் கருத்தை கூட கேரள அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனதெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஆளும் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News