இந்தியா

பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியதால் சர்ச்சை: பா.ஜ.க. கடும் கண்டனம்

Published On 2022-11-30 02:44 GMT   |   Update On 2022-11-30 02:44 GMT
  • காங்கிரசாரின் வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது.
  • கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது.

அகமதாபாத்:

குஜராத் சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (டிசம்பர் 1-ந் தேதி) முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

ஆமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

அனல் வீசிய அவரது பேச்சில், பிரதமர் மோடியை, ராவணனுடன் ஒப்பிட் டார். அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, மக்களிடம் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, உங்கள் கண்களில் என் முகத்தை நிறுத்தி, பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்கிறார். நாங்கள் எத்தனை முறைதான் உங்கள் முகத்தைப் பார்ப்பது? உங்கள் முகத்தை மக்கள் மாநகராட்சி தேர்தலில் பார்க்கிறார்கள். அடுத்து சட்டசபை தேர்தலின்போது பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போதும் பார்க்கிறார்கள். எல்லா இடங்களிலும் உங்கள் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஏன்? உங்களுக்கு எத்தனை முகங்கள் இருக்கின்றன? நீங்கள் என்ன 100 தலைகளைக் கொண்ட ராவணனா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குஜராத் முதல்-மந்திரி பூபேஷ் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "குஜராத் மக்கள் மீதான அவர்களின் (காங்கிரசாரின்) வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்துக்காக இந்த முறையும் குஜராத் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்" என கூறி உள்ளார்.

இதை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா சாடி உள்ளார்.

அவர், "காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் கருத்துகளை பிரதிபலிக்கிறார் கார்கே. 2007-ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலின்போது சோனியா, மோடியை மரண வியாபாரி என அழைத்து இத்தகைய தனிப்பட்ட தாக்குதலை தொடங்கினார். கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது. அவரது வார்த்தைகள், பிரதமர் மோடி மீதான அவமதிப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குஜராத்தி மீதான அவமதிப்பும் ஆகும்" என தெரிவித்தார்.

Tags:    

Similar News