கர்நாடகாவில் கொட்டி வரும் தொடர் மழை
- இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது.
- காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 5-வது நாளாக நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தோனிகல்லு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த தோனிகல்லு கிராமத்தில் 80 குடும்பங்கள் பரிதவித்தது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.