இந்தியா

குறைந்த தொகுதியில் போட்டி: காங்கிரஸ் வெற்றிக்கு சாத்தியமா?

Published On 2024-04-18 03:08 GMT   |   Update On 2024-04-18 03:08 GMT
  • சுதந்திரத்துக்கு பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டது.
  • பா.ஜனதாவின் வளர்ச்சியாலும், மாநில கட்சிகளில் ஆதிக்கத்தாலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது.

காங்கிரஸ்...

1885-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சி, இந்திய சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தியது என்ற பெருமையும் அதற்கு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்தது.

சுதந்திரத்துக்கு பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டது. 364 இடங்களில் வெற்றியை பெற்றது.

இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு 1984-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி தலைமையில் 517 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 414 தொகுதிகளை கைப்பற்றி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த சாதனையை இதுவரை வேறு எந்த கட்சிகளும் முறியடிக்கவில்லை. ஏன்... காங்கிரஸ் கட்சி கூட அந்த சாதனையை மீண்டும் நிகழ்த்தவில்லை.

அதேபோல் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 529 தொகுதிகளில் போட்டியிட்டது. இதுதான் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிகபட்சமாக போட்டியிட்ட தொகுதியாகும்.

இதுவரை நடைபெற்றுள்ள 17 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறை 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஒரு முறை 500 இடங்களிலும் போட்டியிட்டது. 11 முறை 400-க்கும் அதிகமான தொகுதிகளில் களம் கண்டு உள்ளது.

இதுவரை பல வெற்றி தோல்விகளை கண்டபோதிலும், காங்கிரஸ் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களிலேயே போட்டியிட்டுள்ளது.

பா.ஜனதாவின் வளர்ச்சியாலும், மாநில கட்சிகளில் ஆதிக்கத்தாலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.

ஆட்சியை இழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், வாழ்வா...சாவா என்ற நிலையில் 18-வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தமுறை வெறும் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

இதுதான் அந்த கட்சி போட்டியிடும் மிக குறைந்த எண்ணிக்கையாகும்.

மொத்தம் 543 தொகுதிகளில், ஆட்சி அமைக்க தேவையான அந்த 'மேஜிக்' எண்ணிக்கை 272 வேண்டும். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி 330 தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது.

மேலும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், பீகார், தமிழகம் ஆகிய 5 மாநிலங்கள் 249 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.

இந்த மாநிலங்களில் எல்லாம், அங்குள்ள மாநில கட்சிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதில் மேற்கு வங்காளம் தவிர மற்ற 4 மாநிலங்களில் காங்கிரஸ், அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனவே அவர்கள் கொடுக்கும் எண்ணிக்கையிலேயே போட்டியிட வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் தனித்தே போட்டி என்று அறிவித்துவிட்டார். இதனால் அங்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சியுடன் மட்டும் கூட்டணி உள்ளது.

கணிசமான தொகுதிகளை கொண்ட இந்த 5 மாநிலங்களில், மிக சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு, வெற்றி சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுகிறது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

இந்தமுறை காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டாலும், வெற்றி என்பது நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. நாங்கள் இந்த தேர்தலை இந்தியா கூட்டணி என்ற பெயரிலேயே சந்திக்கிறோம். எனவே 2004-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற சூழல் 2024-ம் ஆண்டும் ஏற்படும்.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியுடனும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடனும் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு அவர்களுடன் தொகுதி பங்கீட்டில் நாங்கள் விட்டுக்கொடுத்துள்ளோம். இது எங்களது தேர்தல் வியூகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News