இந்தியா

ஐதராபாத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சானியா மிர்சா?

Published On 2024-03-29 04:03 GMT   |   Update On 2024-03-29 04:03 GMT
  • பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா‌.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.
  • ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனர் சலாவுதீன் ஒவைசி எம்.பி.யாக இருந்தார்.

அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

இந்த முறை அவரை வெல்ல பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.

ஐதராபாத் தொகுதியில் ஒவைசி மற்றும் பா.ஜ.க வேட்பாளரை விட பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சானியா மிர்சாவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் காங்கிரஸ் கட்சியினர் பேசி முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை சானியா மிர்சா போட்டியிட மறுத்தால் அவரது தந்த இம்ரான் மிர்சாவை களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை டெல்லியில் தெலுங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல் துறைக்கு சானியா மிர்சாவை களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News