இந்தியா

மம்தா பானர்ஜி, ஜெய்ராம் ரமேஷ்

ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதா? ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்

Published On 2023-05-30 16:34 GMT   |   Update On 2023-05-30 16:34 GMT
  • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ் கட்சி தாவினார்.
  • யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சுகெந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.

மத்தியில் வலுவாக உள்ள பாஜகவை வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதனை முன்மொழிந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும், இந்த வெற்றி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ், திடீரென ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, பெய்ரோன் பிஸ்வாசை திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்திருருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், இது அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் ஆணைக்கு முற்றிலும் துரோகம் செய்வதாகும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் மீறுவதாக கூறியது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். மாநில கட்சிகளுக்கென சில கடமைகள் உள்ளன என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மேகாலயா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டது. அப்போது, நாங்கள் அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவளித்தோம்" என்றார்.

தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் சுகெந்து சேகர் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் மேலும் சில தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில், முக்கியமான இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

Tags:    

Similar News