பிரதமர் பதவியில் நானா?: மனம் திறந்த யோகி ஆதித்யநாத்
- கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன்.
- அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல என தெரிவித்தார்.
லக்னோ:
சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, விரைவில் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியானது.
இதற்கிடையே, பிரதமர் மோடிக்குப் பிறகு அமித்ஷா அல்லது உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளனர் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இப்போது மாநில முதல் மந்திரியாக இருக்கிறேன். இதுவும்கூட கட்சி தான் என்னை உத்தரப் பிரதேச மக்களுக்காக இந்த பொறுப்பை வழங்கியுள்ளது.
அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. நான் ஒருபோதும் என்னை முழு நேர அரசியல்வாதியாகக் கருதியது இல்லை. கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன். ஆனால் உண்மையில் நான் ஒரு யோகி. இங்கு இருக்கும் வரை இந்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வேலையும் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும்.
நான் முதல் மந்திரியாக இருக்கவே கட்சி தான் காரணம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நான் இங்கே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்கமுடியுமா?
தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்பதைக் கட்சியின் பாராளுமன்ற குழு தான் முடிவு செய்யும். எல்லா விவாதமும் அங்கு தான் நடக்கும்.
பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எனவே சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது. ஆனால், வேண்டும் என்றே இதுபோல பேசுபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.