'சுத்தமான நீர் என்பது மக்களின் பொறுப்பு' - 20 பேர் உயிரிழந்த இந்தூர் விவகாரத்தில் பாஜக எம்பி கருத்து!
- அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று கருதுவது சரியல்ல.
- சாக்கடைகளை சுத்தம் செய்வது பொதுமக்களின் பொறுப்பா, மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை அடையாளம் காண்பதும் பொதுமக்களின் வேலையா?
இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டியலில் கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம். ஆனால் கடந்த மாதம் இந்தூரின் பாகிரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிலர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காண்டுவா தொகுதியில் ஏதேனும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என பாஜக எம்.பி. ஞானேஸ்வர் பாட்டீலிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
"காண்ட்வாவாக இருந்தாலும் சரி, நகராட்சி மன்றமாக இருந்தாலும் சரி, கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, அனைவரும் இந்தூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று கருதுவது சரியல்ல. பொதுமக்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. தண்ணீர் தொட்டிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
சுத்தமான தண்ணீர் என்பது நமது பிரதமர் மோடியின் உறுதி, ஒவ்வொரு வீட்டிலும் குழாய்கள் வழங்கப்படுகின்றன. குறைபாடுகள் இருந்தால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
அதற்கு தொடர்ந்து தண்ணீரின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை தகவல் அறிவித்தும், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பதிலளித்ததற்கு, முதலமைச்சர் "துரதிர்ஷ்டவசமான" சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாட்டீல் கூறினார்.
ஞானேஸ்வர பாட்டீலின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா,
சாக்கடைகளை சுத்தம் செய்வது பொதுமக்களின் பொறுப்பா, மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை அடையாளம் காண்பதும் பொதுமக்களின் வேலையா என்பதை ஞானேஷ்வர் பாட்டீல் தெளிவுபடுத்த வேண்டும். குடிநீரை சுத்தம் செய்வது கூட பொதுமக்களின் பொறுப்பு என்றால், அரசாங்கம் நமது வரிப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அரசு ஏன் வரி வசூலிக்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பாட்டீல் தனது கருத்தை தெளிவுப்படுத்தாவிட்டால், காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.