இந்தியா

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை: தலைமை நீதிபதி அறிவிப்பு

Published On 2022-11-11 02:14 GMT   |   Update On 2022-11-11 02:14 GMT
  • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
  • அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

புதுடெல்லி :

சுப்ரீம் கோர்ட்டில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மற்றும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது ஆன்லைன் மூலம் முதலில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் இதனை பரிசீலனை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.

இதனை அவர் ஆய்வு செய்து, வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறை காலதாமதமாகும்போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி தங்களது மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம்.

இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

இதேபோல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு தானாக பட்டியலிடும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இந்த நடைமுறையை செயல்படுத்துமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News