இந்தியா

ரூ.123 கோடிக்கு தங்கம் கடத்தியது அம்பலம் - நடிகை ரன்யா ராவ் மீது அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2025-11-08 08:33 IST   |   Update On 2025-11-08 08:33:00 IST
  • நடிகை ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
  • ரன்யா ராவ் தனது வளர்ப்பு தந்தையான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டார்.

பெங்களூரு:

துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரன்யா ராவ் தனது வளர்ப்பு தந்தையான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டார்.

விமான நிலையத்திற்கு வந்திறங்கும் ரன்யா ராவை போலீஸ் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் வைத்து ரன்யா ராவை அதிகாரிகள் சோதனை கூட நடத்தாமல் அனுப்பி வைத்திருந்தனர். இதற்கிடையில், கைதான ரன்யா ராவ் மீது காபி போசோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், ஓராண்டுக்கு சிறையில் இருந்து அவர் வெளியே வர முடியாத நிலையில் கம்பி எண்ணி வருகிறார்.

அதே நேரத்தில் ரன்யா ராவ் கைதாகி 8 மாதங்கள் ஆவதால், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகள் தயாராகி வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக ரூ.123 கோடிக்கு ரன்யா ராவ் தங்கம் கடத்தி இருப்பது உறுதியாகி இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்களை குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள் சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குற்றப்பத்திரிகையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ், போலீஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியது, இந்த தங்கம் கடத்தலில் தொடர்புடைய நகைக்கடை அதிபர்கள் உள்பட 4 பேர் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மேலும் அடுத்த வாரம் ரன்யா ராவ் உள்ளிட்டோர் மீது அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News