இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை- விளையாட்டுத் துறை மந்திரியுடன் சந்திப்பு

Published On 2023-06-07 07:01 GMT   |   Update On 2023-06-07 10:43 GMT
  • போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
  • பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுடெல்லி:

பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

ஒரு மைனர் உள்பட 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும், டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினிஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீதான இரண்டு வழக்குகளில் ஒன்று போக்சோ சட்ட வழக்காகும்.

இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இதன் பிறகு பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அவ ரது உதவியாளர்கள், பணியாளர்கள் என 12 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனையுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்றிரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நான் மீண்டும் அவர்களுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மத்திய அரசின் இந்த அழைப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாக்ஷி மாலிக் கூறும் போது "மத்திய அரசின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். தங்கள் தரப்பில் அனைவருக்கும் சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வோம்" என்றார்.

இதற்கிடையே மத்திய அரசின் அழைப்பை தொடர்ந்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரிஜ்பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரிடம் வலியுறுத்தினார்கள்.

Tags:    

Similar News