இந்தியா

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதா?- மத்திய அரசு விளக்கம்

Published On 2025-08-02 12:37 IST   |   Update On 2025-08-02 12:37:00 IST
  • இந்தியாவும், ரஷியாவும் நிலையான கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன.
  • அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் பல சவால்களைச் சமாளித்து வந்துள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார்.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாத நிலையில் இந்தியா மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

மேலும் ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வாங்கி வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு அபராத வரியும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியா, ரஷிய பொருளாதாரங்கள் இறந்த பொருளாதாரங்கள் என்றும் டிரம்ப் விமர்சித்தார்.

இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வட்டாரங்கள் தரப்பில் கூறும்போது, நாட்டின் எரிசக்தி கொள்முதல்கள் சந்தை மற்றும் தேசிய நலன்களால் இயக்கப்படுகின்றன.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷிய இறக்குமதியை நிறுத்தியதாக எந்த தகவலும் இல்லை. இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டி அளித்தபோது, எரிசக்தி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்து கூறியதாவது:-

எரிசக்தி தேவைகளில் எங்கள் அணுகுமுறை என்பது சந்தைகளில் என்ன சலுகைகள் உள்ளன என்பதையும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அது சந்தை இயக்கவியல் மற்றும் தேசிய நலனால் வழிநடத்தப்படுகிறது. இந்தியாவும், ரஷியாவும் நிலையான கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் பல சவால்களைச் சமாளித்து வந்துள்ளது. இரு நாடுகளின் கூட்டாண்மை பல மாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி வந்துள்ளது. இந்த உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளது. இரு தரப்பினரும் உறவை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நடவடிக்கையில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இந்த நட்புறவு தொடர்ந்து முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இரு தரப்பு உறவுகள் அந்நாடுகளின் சொந்த தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. இதில் 3-வது நாட்டின் தலையீடு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News