உடைந்த பீர்பாட்டிலால் 36 முறை கணவரை குத்திக்கொன்ற இளம்பெண்
- காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் கோல்டன் பாண்டே என்ற ராகுல் (வயது25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் அந்த பெண் யுவராஜ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார். அப்போது ராகுலை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி ராகுல் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இந்தூர்-இச்சாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே சென்ற போது ராகுலின் மனைவி தனது செருப்பு கழன்று கீழே விழுந்து விட்டது. எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
உடனே ராகுல் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் பீர்பாட்டிலால் ராகுலை சரமாரியாக தாக்கினர். மேலும் உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்திக்கொலை செய்தனர்.
பின்னர் ராகுலின் மனைவி தனது கள்ளக்காதலன் யுவராஜ்க்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது கொலை செய்யப்பட்ட ராகுலின் உடலை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை காட்டுப்பகுதியில் வீசி விட்டு 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்ற ராகுல் மற்றும் அவரது மனைவியையும் காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது ராகுல் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராகுலை அவரது மனைவி தனது கள்ளக்காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யதது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜின் நண்பர்களான லலித் பாட்டீல் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.