இந்தியா

குழந்தை, கணவரை காப்பாற்ற முதலைகளுடன் சண்டையிட்ட வீரப்பெண்மணிகள்

Published On 2025-08-21 07:06 IST   |   Update On 2025-08-21 07:06:00 IST
  • கனமழையால் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம்.
  • அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

லக்னோ:

உத்தரபிரதேசத்தில், இருவேறு இடங்களில் பெண்கள், முதலைகளுடன் சண்டையிட்டு தங்கள் குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் வீரப்பெண்மணிகள் தங்கள் அன்புக்குரியவர்களை காப்பாற்ற முதலைகளுடன் போராடிய சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு சம்பவம் இங்குள்ள கைரிகாட் பகுதியில் உள்ள தாகியா கிராமத்தில் நடந்தது.

இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் திடீரென அலறும் சத்தம் கேட்டது.

உடனே அருகில் நின்ற அவனது தாய் மாயா, ஓடிச் சென்று பார்த்தபோது ஒரு ராட்சத முதலை சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே எதையும் யோசிக்காமல் சட்டென்று ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள் அந்த வீரத்தாய். குழந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட தாய், சிறுவனை கவ்விக் கொண்டிருந்த முதலையின் தாடையை குறிவைத்து தன்னிடம் இருந்த சிறு கம்பியால் மீண்டும் மீண்டும் தாக்கினார்.

இதை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை பிடியைத் தளர்த்தி சிறுவனை விடுவித்தது. பின்னர் ஆழமான தண்ணீருக்குள் முதலை ஓடி மறைந்தது.

முதலை தாக்கியதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலையைப் பிடிக்க அந்த கால்வாயில், 3 இடங்களில் வலை விரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல மோதிபூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பெண்மணி தனது கணவரை முதலையிடம் இருந்து காப்பாற்றி உள்ளார்.

மாதவபூர் கிராமத்தில் சைபு (வயது 45) என்பவர், தனது மனைவி சுர்ஜனா மற்றும் மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றார். அப்போது ஒரு முதலை சைபுவின் காலைக் கடித்து இழுத்தது. இதனால் அவர் கூச்சலிட்டார்.

உடனே சுர்ஜனா தனது புடவையை தண்ணீரில் வீசி, கணவரை பிடித்துக் கொள்ளச் செய்தார். பின்னர் முதலையை தாக்கினார். அப்போது அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து முதலையை தடிகளால் தாக்கினார்கள். இதனால் முதலை சைபுவை விட்டுவிட்டு ஓடியது. காயம் அடைந்த சைபு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்றும், அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

Similar News