இந்தியா

டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனை

Published On 2025-07-18 10:56 IST   |   Update On 2025-07-18 10:56:00 IST
  • பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினி செக்டாரில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளிக்கு மிரட்டல் வந்துள்ளது.
  • குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிஷி தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினி செக்டாரில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளிலிருந்து மாணவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவி யுடன் பள்ளியில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்புதுறை வீரர்களும் பள்ளி முன்பு தயாரான நிலையில் உள்ளனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 

போலீசார் அவர்களை ஒழுங்குப்படுத்தி மாணவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் இந்த மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், 11 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தது.

முன்னாள் கல்வி அமைச்சரும் முதல்வருமான அதிஷி, இதுபோன்ற சம்பவங்கள் அரசாங்கத்தின் தவறு என்றும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு  வழங்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

Tags:    

Similar News