ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. நடத்திய போராட்டத்தில் வன்முறை
- முதல்-மந்திரியின் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- அரசு வேலைகள் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என வீரர்களின் விதவை மனைவிகள் வலியுறுத்தினர்.
ஜெய்ப்பூர்:
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராஜஸ்தான் மாநில சி.ஆர்.பி.எப். வீரர்களின் மனைவிகள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பா.ஜ.க. மேலவை எம்.பி. கிரோடி லால் மீனாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். வீரர்களின் மனைவிகள், தங்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். வீரமரணம் அடைந்தவர்களின் மனைவிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக சர்வாதிகார போக்குடன் அரசு நடக்கிறது என மீனா கூறினார்.
இதுபற்றி கெலாட் கூறும்போது, அரசியல் லாபங்களுக்காக விதவைகளை மீனா பயன்படுத்தி வருகிறார் என குற்றச்சாட்டாக கூறினார். ஆனால், போலீசார் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர் என மீனா கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் வீட்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் விதவை மனைவிகளை போலீசார் நேற்று காலை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் இல்லம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க. போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கைகளில், கம்புகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் காணப்பட்டனர். சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசியதில் வன்முறை வெடித்தது. போலீசாரின் பேரிகார்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
முன்னதாக, வெவ்வேறு தாக்குதல்களில் உயிரிழந்த வீரர்களின் விதவை மனைவிகளை, முதல்-மந்திரி கெலாட் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், அரசு வேலைகள் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என கெலாட்டிடம் வலியுறுத்தினர். புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் மனைவிகள் கெலாட்டை சந்திக்கவில்லை.
இதேபோன்று, ஜெய்ப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் தொடரும் என கூறிய அவர், அரசின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என கூறியதுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளார்.