VIDEO: பீகார் எம்.பி.யின் 2 கைவிரல்களிலும் மை..! - தவறாக பூசியதாக தேர்தல் அதிகாரி விளக்கம்!
- சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரி.
- தவறுதலாக 2 கைகளிலும் மை வைத்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
இந்நிலையில் இந்த பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது. இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது.
சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தபோது முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டினார். அந்த விரலிலும் மை அடையாளம் இருந்தது.
இதன் வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், தலைமை அதிகாரி ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார்.
அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. பெரிய தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் சாதாரணம், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்
பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், "ஷாம்பவி வாக்களித்தபிறகு அவரது இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் இருப்பது தொடர்பான வீடியோ குறித்து வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மை அடையாளம் இடும் பணியில் இருந்த வாக்கு சாவடிப் பணியாளர் தவறுதலாக முதலில் வலது கையிலுள்ள விரலில் மை அடையாளம் இட்டார். பின்னர் தலைமை அதிகாரியின் தலையீட்டின் பேரில் இடது கையிலுள்ள விரலிலும் மை அடையாளம் இடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ்- ஆர்ஜேடி வாக்கு மோசடி குறித்து குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக பாஜக தலைவர்கள் சிலர் கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலிலும், தற்போது நடந்த பீகார் தேர்தலிலும் வாக்கு செலுத்திய புகைப்படங்களை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பகிர்ந்து வாக்கு மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.