இந்தியா

அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி: வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்

Published On 2024-01-26 18:27 IST   |   Update On 2024-01-26 18:39:00 IST
  • அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
  • அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இருநாட்டு படையினரும் இந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப் படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலையில் இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும்.

குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி-வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை கண்டுகளிப்பர்.

இந்நிலையில், 75-வது இந்திய குடியரசுதின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

எல்லை பாதுகாப்புப் படைவீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய தேசியக்கொடியை அசைத்தும், ஜெய்ஹிந்த் என கோஷமிட்டும் உற்சாக குரல் எழுப்பினர்.

Tags:    

Similar News