இந்தியா

ராஜ்வீந்தர் சிங்கை கைது செய்த டெல்லி போலீசார்

துப்பு கொடுத்தால் ரூ.5.5. கோடி...ஆஸ்திரேலியா தேடிய கொலை குற்றவாளி டெல்லியில் கைது

Published On 2022-11-25 18:45 GMT   |   Update On 2022-11-25 18:45 GMT
  • தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
  • அவரை நாடு கடத்த இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை விடுத்தது.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள வாங்கெட்டி கடற்கரை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு, 24 வயது நிரம்பிய இளம்பெண் டோயா கார்டிங்லி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்வீந்தர் சிங் (வயது 38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டு விட்டு தலைமறைவான அவரைப் பற்றி துப்பு கொடுத்தால் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (ரூ.5.5 கோடி) சன்மானம் வழங்கப்படும் என குயீன்ஸ்லேண்ட் காவல்துறை அறிவித்தது. இது குயீன்ஸ்லாந்து காவல்துறை வரலாற்றில் மிக அதிகமான சன்மானம் ஆகும்.

இதனையடுத்து விமானம் மூலம் ராஜ்வீந்தர் சிங் இந்தியா தப்பி வந்துவிட்டதாகவும், அவரை நாடு கடத்தவேண்டும் என்றும் இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கடந்த 2021ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது. அவரை கைது செய்து ஒப்படைக்க இந்தியா ஒப்புதல் அளித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய போலீசார் மற்றும் இந்திய சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் டெல்லி காவல்துறையின் சிறப்புப் படையினர் ராஜ்வீர் சிங்கை நேற்று கைது செய்தனர். உடனடியாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30ம் தேதி வரை நிதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News