காஷ்மீரில் அச்சம் தணிந்துள்ளது: பரூக் அப்துல்லா
- பஹல்காமில் அச்சம் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது, அது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக உணர்கிறேன்.
- எவ்வளவு மக்கள் பஹம்காமிற்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க போர் பதற்றம் நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரில் அச்சம் சூழ்நிலை குறைந்துள்ளது என தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
பஹல்காமில் நடந்தது மிகவும் வருந்தம் அளிக்கிறது. அச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது. மக்கள் இங்கு மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்க வேலைகளைக் கேட்கவில்லை. பஹல்காமில் அறைகள் கிடைக்கவில்லை. இதுதான் பஹல்காம் சூழ்நிலையாக உள்ளது.
பஹல்காமில் அச்சம் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது, அது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக உணர்கிறேன். எவ்வளவு மக்கள் பஹம்காமிற்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். நான் குல்மார்க்கில் இருந்தேன், 400-500 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
பரூக் அப்துல்லா தனத நண்பர்களுடன் பஹல்காமிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.