இந்தியா

டெல்லியில் குடியிருப்புப் பகுதி இடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய அதிஷி கைது

Published On 2025-06-10 22:27 IST   |   Update On 2025-06-10 22:27:00 IST
  • ரேகா குப்தா, "எந்த குடிசையையும் இடிக்க மாட்டோம்" என்று கூறியதற்கு முரண்பாடாக இருப்பதாக அதிஷி தெரிவித்துள்ளார்.
  • முன்னதாக தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மாதராசி முகாம் இவ்வாறு இடிக்கப்பட்டது

டெல்லி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி,  புலம்பெயர்ந்தோர் வசிக்கும் குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதிஷியின் கல்காஜி தொகுதியில் உள்ள பூமிஹீன் முகாம் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) இடிக்கப்படுவதை எதிர்த்து அவர் போராட்டம் நடத்தியபோது அவர் கைதானார்.

டிடிஏ ஏற்கனவே அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு காலி செய்யுமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இடிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அதிஷி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் குவிக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்திருந்தார். "பாஜக பூமிஹீன் முகாமை இடித்து தரைமட்டமாக்கப் போகிறது. இன்று குடிசைவாசிகள் போராட்டம் நடத்தப் போகிறார்கள். எனவே பாஜக அரசு ஆயிரக்கணக்கான போலீசாரையும் சிஆர்பிஎஃப் படையினரையும் அனுப்பியுள்ளது" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "எந்த குடிசையையும் இடிக்க மாட்டோம்" என்று கூறியதற்கு முரண்பாடாக இருப்பதாக அதிஷி தெரிவித்துள்ளார்.

இது ஒரு வருடத்தில் மூன்றாவது இடிப்பு என்று அதிஷி தெரிவித்தார். பாஜக அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் பலர் வேலை இழந்து வருவதாகவும், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஆதரவாக தான் போராடுவதாகவும் அவர் கூறினார். மக்கள் பாஜகவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் அதிஷி எச்சரித்தார்.

இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இடிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் புறக்கணிக்க முடியாது என்று ரேகா குப்தா கூறினார். முன்னதாக தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மாதராசி முகாம் இவ்வாறு இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை பூமிஹீன் (நிலமற்றவர்களின்) முகாம் இடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. 

Tags:    

Similar News