இந்தியா

ஃபிரோசாபாத் நகரில் தீ விபத்து

தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி- 3 பேர் படுகாயம்

Published On 2022-11-29 20:31 GMT   |   Update On 2022-11-29 20:32 GMT
  • ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
  • உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்

 ஃபிரோசாபாத்:

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.

இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News