இந்தியா

என்னை கைது செய்யவேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published On 2024-01-19 02:47 GMT   |   Update On 2024-01-19 02:47 GMT
  • சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது.
  • பா.ஜ.க. செய்த சாதனைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார் கெஜ்ரிவால்.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த இதுவரை 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் கெஜ்ரிவால் இதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், என்னை கைது செய்யவேண்டும் என்பதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. என்னை கைது செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது.

சம்மன் அனுப்பும்படி அமலாக்கத்துறைக்கு பா.ஜ.க. அறிவுறுத்துகிறது. இரு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் எனக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.

தேர்தலுக்கு முன் என்னை கைது செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம். இதன்மூலம் எனது பிரசாரத்தை தடுத்து விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. பா.ஜ.க. செய்த சாதனைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News