பாபரின் பெயரில் கட்டப்படும் எந்த மசூதியும் இடிக்கப்படும் - உ.பி. துணை முதல்வர் மிரட்டல்
- இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
- 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கேசவ் பிரசாத் மௌரியா, "மசூதி கட்டுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று மிரட்டல் விடுத்தார்.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.