இந்தியா

ஆந்திராவில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் ரூ.7 கோடி - வீடியோ வைரல்

Published On 2024-05-11 07:48 GMT   |   Update On 2024-05-11 08:09 GMT
  • ஆந்திராவில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
  • ஏழு அட்டை பெட்டிகள் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் ஆணையம் பறக்கும்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகிறது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் நல்லஜார்லா மண்டல் அருகே ஆனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அந்த வாகனம் கவிழ்ந்து டிரைவர் காயம் அடைந்தார். அந்த பகுதி மக்கள் காயம் அடைந்த அவரை மீட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த ஏழு பெரிய பெட்டியில் பணம் இருப்பதாக சந்தேகப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது ஏழு பெட்டிகளிலும் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டனர்.

உடனே அதிகாரிகளை வரவழைத்து பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது பெரிய அட்டை பெட்டிகளில் ஏழு கோடி ரூபாய் இருந்தது தெரியவந்து. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காயம் அடைந்த டிரைவரை மருத்துவனையில் சேர்த்துள்ளனர். பணம் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் (15-ந்தேதி) 25 மக்களவை தொகுதிகளுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News