இந்தியா

டெல்லியில் காற்று மாசுபாடு- போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கைது செய்த போலீசார்

Published On 2025-11-10 14:15 IST   |   Update On 2025-11-10 14:15:00 IST
  • இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.
  • 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

புதுடெல்லி:

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் அளவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து டெல்லியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தியா கேட் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெற்றோர்களும், குழந்தைகளும் இதில் கலந்து கொண்டனர். எங்களுக்கு சுவாசிக்க உதவுங்கள் என்ற வாசகத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாசு நெருக்கடியின் அடையாள நினைவூட்டல்களான நெபுலைசர்கள் மற்றும் மருந்து சீட்டுகளுடன் பெண்கள் பங்கேற்றனர்.

இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் பங்கேற்ற ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறும்போது, 'காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக காற்றின் தரக் குறியீட்டுத் திரைகளில் தண்ணீரை பா.ஜ.க. அரசு தெளித்தது. தரவுகளை கையாளுகிறது. இது பா.ஜ.க.வின் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் குறைக்கிறது.

பா.ஜ.க.வினர் கூட எங்களுடன் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் காற்று சுத்திகரிப்பான்களுடன் வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள், காற்றும், நீரும் அரசியலின் விஷயம் அல்ல என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News