இந்தியா

உலக பணக்காரர்கள் பட்டியலில் 33-வது இடத்துக்கு சரிந்த அதானி- அம்பானி 10-வது இடத்தில் நீடிப்பு

Published On 2023-02-27 06:05 GMT   |   Update On 2023-02-27 06:05 GMT
  • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
  • 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News