5 மாதத்தில் 50 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ்- விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
- துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் தான் விற்பனை செய்து வந்துள்ளார்.
- தங்கம் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரன்யா ராவ், அவரது நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் சாகில் ஜெயின் ஆகிய 3 பேரும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக சாகில் ஜெயினிடம் விசாரணை நடத்திவிட்டு நேற்று முன்தினம் தான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்திருந்தது. மேலும் இந்த வழக்கில் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் கோர்ட்டுக்கு அளித்துள்ள ஆதாரங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களும் தற்போது வெளியே வந்துள்ளது.
அதன்படி, துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் தான் விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வாறு தங்கத்தை விற்று கிடைக்கும் பணத்தை ஹவாலாவாக துபாய்க்கு அவர் அனுப்பி மாற்றியது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை துபாயில் இருந்து 49 கிலோ 600 கிராம் தங்கத்தை ரன்யா ராவ் கடத்தி வந்துள்ளார். அதனை விற்பனை செய்ய சாகில் ஜெயினிடம் அவர் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த 5 மாதத்தில் துபாயில் தங்கம் வாங்குவதற்காக ரூ.30 கோடி ஹவாலா பணம் மாற்றப்பட்டு இருப்பதாகவும் சாகில் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனால் தங்கம் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.