இந்தியா

கைதான நம்ரதா.

கருத்தரிப்பு மையம் மூலம் 80 குழந்தைகள் கடத்தி விற்பனை- விசாரணையில் பரபரப்பு தகவல்

Published On 2025-08-07 11:40 IST   |   Update On 2025-08-07 11:40:00 IST
  • தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.
  • குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. இவர் விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையங்களை நடத்தி வருகிறார்.

குழந்தை இல்லாத தம்பதிகளிடம் சோதனை குழாய் மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்று தருவதாக நம்ப வைத்தார். அதன்படி வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வந்தார்.

தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.

இதற்காக தம்பதிகளிடம் ரூ.30 முதல் 40 லட்சம் வரை வசூல் செய்தார். மேலும் வாடகை தாய்க்கு உடல்நலம், மருத்துவ செலவுகள், பராமரிப்பு ஊட்டிச்சத்து செலவு என 9 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தார்.

ஆனால் இந்த கருத்தரிப்பு மையத்தில் கடத்தப்படும் குழந்தைகளை வாடகை தாய் முறையில் பெற்றதாக கூறி தம்பதியினர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் நம்ரதா உள்பட 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளை கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதன் மூலம் குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதற்காக குழந்தை இல்லாத தம்பதிகளிடம் நம்ரதா ரூ. 25 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நம்ரதா மற்றும் அவரது மகன் ஜெயந்த் கிருஷ்ணாவின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

Tags:    

Similar News